» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை : பைக்கை வழிமறித்து மர்மகும்பல் வெறிச்செயல்

வியாழன் 5, டிசம்பர் 2024 8:37:19 AM (IST)

வீரவநல்லூர் அருகே பைக்கை வழிமறித்து லோடு ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் உலகநாதன் (40). டிரைவரான இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று வீரவநல்லூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மாலையில் அரிகேசவநல்லூர் வழியாக ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

வீரவநல்லூர் அருகே மகாராஜநகர் பனங்காட்டு பகுதியில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்மகும்பல் திடீரென்று உலகநாதனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உலகநாதனை சரமாரியாக வெட்டினார்கள். அவரது முகமும் சிதைக்கப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உலகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நெல்லையில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக வீரவநல்லூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். வீரவநல்லூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory