» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்

செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாபக அவர் வெளியிட்ட அறிக்கை : குற்றால அருவியை கொண்ட எழில்மிகு தென்காசி மாவட்டத்தில்  சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற நிலையில், சாலை வசதி சரிவர இல்லாமல் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், தென்காசி சட்டமன்ற உறுப்பினராக சட்டசபையில் பேசிய நான், தென்காசி சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மனதில் கொண்டு தென்காசியில் புறவழிச்சாலை அமைத்திட கோரிக்கை முன்வைத்தேன்.

இலஞ்சி ரோட்டில் இருந்து ஆசாத் நகர் வரை திட்டமிடப்பட்ட இந்த புறவழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்போதே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது, சாலைவிரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தாலும், திட்டம் நிறைவுபெறாமல் தொய்வுநிலையில் இருப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

குற்றாலம் சீசன் காலங்களில், தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானோரும் குற்றால அருவியில் நீராடி செல்கிறார்கள். பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி கோவிலுக்கும் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அருகில் உள்ள  கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு வர்த்தக பணிகளுக்காக தினமும் தென்காசிக்கு வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வருகை, போக்குவரத்து அதிகரித்த நிலையில் உரிய சாலை வசதி இல்லாமல் இருப்பது சுற்றுலாத்துறைக்கு பின்னடைவை தரும்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த சுற்றுலா நகரத்தில் இதுபோன்ற முக்கிய திட்டப்பணிகள் தொய்வுநிலையில் நடைபெறுவது வேதனைக்குரியது.  எனவே, தமிழக அரசு தென்காசி புறவழிச்சாலை திட்டத்திற்கு முக்கியத்துவம், முன்னுரிமை அளித்து சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவுசெய்து, புறவழிச்சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory