» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:06:59 AM (IST)



சென்னை ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை

மாநில முதல்-அமைச்சர்களும் கொடி ஏற்றுவதற்கான உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர். 1967-ல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தற்போது திமுக ஆட்சியில் பெரும்பாலான தியாகிகளுக்கு மனிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தியாகிகளை தொடர்ந்து போற்றிவரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு. இதை நிறைவேற்றி முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என இவ்விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்.

முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11ஆயிரமாக உயர்த்தப்படும்.

2-ம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும். முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கம் செய்யப்படும். 

தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு "தகைசால் தமிழர்” விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory