» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.15) மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.

இவரது அண்ணன்கள் மூவர் ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்கள். எனவே, ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார் கணேசன். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்எஸ்எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

முதலில் நாகர்கோவில் நகரப் பொறுப்பாளர். அடுத்து, நெல்லை, மதுரை மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ‘எம்ஆர்டிகே’ எனப்படும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர். அடுத்து, குமரி முதல் திருச்சி வரையிலான அத்தனை மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர். அடுத்து மாநில இணை அமைப்பாளர். 

ஆர்எஸ்எஸ்ஸில் இப்படிப் பயணித்த கணேசனை பாஜக பணி நோக்கித் திருப்பியவர் ஹெச்.வி.சேஷாத்ரி. 1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை அழகுபார்த்தது பாஜக. மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் ஏனைய உறுப்பினர்களோடு நட்போடு உறவாடும் கணேசனைப் பலர் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எம்.பி. பதவியைத் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநராக இருந்தார். பின்னர் நாகலாந்து ஆளுநராக்கப்பட்டார். இல.கணேசன் நல்ல வாசிப்பாளரும் கூட, பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.

தமிழ் ஆர்வலர், அரசியலில் நிதானமானவர், யோகாவில் ஈடுபாடு உடையவர், வாசிப்பாளர், இலக்கிய ஆர்வம் மிக்கவர், தான் பற்றிக் கொண்ட ஆர்எஸ்எஸ் கொள்கைக்கான சிறந்த செயற்பாட்டாளர் என்ற பல்வேறு பண்புகளோடு இருந்த அவரின் மறைவு பாஜகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory