» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
சனி 16, ஆகஸ்ட் 2025 11:53:39 AM (IST)
பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயற்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் காரணமாக காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் வேளாண் நிலங்களின் பாதிப்பு ஆகிய சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற உடல்நலக் குறைவுகளை எதிர்கொள்கின்றனர்.
மீன் கழிவுகள் மற்றும் மீன் எண்ணெய் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கெட்டுப்போன மீன்கள், சரியான குளிர்பதன வசதிகளில் சேமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிகளின்படி, மீன் மற்றும் மீன் பொருட்கள் -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்பதனக் கிடங்குகளில் சேமிக்கப்பட வேண்டும்.
மேலும், கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு மூடப்பட்ட கொள்கலன்களில் அகற்றப்பட வேண்டும். ஆனால், இந்த ஆலைகளில் முறையற்ற சேமிப்பு மற்றும் கழிவு மேலாண்மை காரணமாக துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது, இது உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் செயலாகும். இவற்றைத் தடுக்க வேண்டிய உணவுப் பாதுகாப்புத் துறையோ, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிக்காப்பதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலைகளை எதிர்க்கும் விதமாகத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்தது முதல், நாள் கூடல், மாதக் கூடல் நிகழ்ச்சிகள் மற்றும் கருப்புக் கொடி ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வடிவில் போராடி வருகிறார்கள்.
கிராமசபைக் கூட்டம் நடத்தினால், மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனும் அச்சத்தால் பொட்டலூரணியில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. மக்கள் சீரழிவுகளைச் சந்திக்கக் காரணமாகவும் இருந்துவிட்டு, அவர்களின் மக்களாட்சிக் குரல்களையும் நெரிக்கும் அரசு இக்கொடுங்கோன்மைப் போக்கினை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முதலில் இந்த ஆலைகளை உடனடியாக மூடிட வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, உணவு பாதுகாப்பு விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளில் ஏற்பட்ட மீறல்கள் குறித்து ஆய்வு செய்திடவும் விதிகளை மீறிய ஆலைகளின் உரிமம் பறிக்கப்பட்டுக் கடும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும் என்று தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்
சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)

மாநில அளவிலான வின்வெளி அறிவியல் மாநாடு தொடக்கம் : இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 3:11:49 PM (IST)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சனி 16, ஆகஸ்ட் 2025 12:22:24 PM (IST)

புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 9:02:29 AM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)
