» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: பயணிகள் ஏமாற்றம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:48:58 AM (IST)
புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை தெற்கு ரயில்வே புறக்கணித்துள்ளதாக பயணிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தெற்கு ரயில்வே 59 ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஒரு ரயிலுக்கு மதுரை - புனலூர் ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாவட்டத்தில் வேறு எந்த ஒரு நிறுத்தமும் அறிவிக்கப்படவில்லை இது கன்னியாகுமரி மாவட்டத்தை புறக்கணிக்கும் விதத்தில் ஏமாற்றமாக உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இவ்வாறு ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 31 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அனுமதித்துள்ளது. இந்த ரயில்களில் அதிக அளவு நிறுத்தங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ஆகும். அந்த நேரமும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரே ஒரு ரயில் நிறுத்தத்துடன் புறக்கணிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை போல் இல்லாமல் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த பரப்பளவில் சிறிய மாவட்டம் ஆகும். இதிலும் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பெருவாரியான மக்கள் வசிக்கும் கல்குளம், கிள்ளியூர், மற்றும் விளவன்கோடு தாலுகாகளில் வசிக்கின்றனர். இவ்வாறு வசிக்கும் இந்த மக்கள் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்கள் வழியாக பணம் செய்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்வது இல்லை என்ற குறை பல ஆண்டுகளாக உள்ளது.
இந்திய ரயில்வேதுறை கோரோனா காலகட்டத்தில் ரயில்களின் வேகம் அதிகரிக்கும் பொருட்டு பூஜ்ஜிய காலஅட்டவணை என்ற திட்டத்தின்படி புதிய கால அட்டவணை தயாரித்து வெளியிட்டது. அதன்படி ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் புதிய நேரங்களில், ரயில்களின் வருவாய் குறைவாக உள்ள தேவைபடாத நிறுத்தங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜிய கால அட்டவணையில் ரத்து செய்யப்பட்ட நிறுத்தங்கள்
1. மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர், நாங்குநேரி, ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு
2. நாகர்கோவில் - கோட்டயம் ரயில் நாகர்கோவில் டவுண், வீராணி ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு, தனுவச்சபுரம், அமரவிளை, பாலராமபுரம், நேமம்
3. நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயில் தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, பணக்குடி, மேலப்பாளையம்
4. சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் 16127-16128 - ஆரல்வாய்மொழி
5. சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி 16723-16724 – பணகுடி
6. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் 22621-22622 - நாங்குநேரி
இரணியல் ரயில் நிலையத்தில் திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் நிறுத்தம்
திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் முதலில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்கப்படவில்லை. தற்போது இரணியல் ரயில் நிலையத்தில் தினசரி 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றது.
இரணியல் ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் நாகர்கோவில் ரயில் நிலையமும் மறுமார்க்கம் 15 கி.மீ தொலைவில் குழித்துறை ரயில் நிலையமும் அமைந்துள்ளது. கல்குளம்தாலுகாவை சார்ந்த பயணிகள் இந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணிக்க வேண்டுமானால் குழித்துறை அல்லது நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு சென்றால் மட்டுமே பயணிக்க முடியும். இந்த கோரிக்கையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிறுத்தம் வாங்க முடியவில்லை.
கொங்கன் பாதையில் செல்லும் ரயில்கள் குழித்துறை நிறுத்தம்:
நாகர்கோவில் - காந்திதாம் ரயில் மற்றும் திருநெல்வேலி – ஜாம்நகர் ரயில் ஆகிய கொங்கன் பாதையில் செல்லும் இரண்டு ரயிலுக்கும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது. ஆனால் ரயில்வேதுறை திருநெல்வேலி – ஜாம்நகர் ரயிலுக்கு குழித்துறைக்கு பதிலாக குழித்துறையை விட பலமடங்கு வருவாய் குறைந்த கேரளாவில் அமைந்து உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக பாறசாலையில் 2019-ம் ஆண்டு நிறுத்தம் வழங்கியது. ஆனால் இன்றுவரை இந்த ரயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் கிடைக்கவில்லை . அப்போது குமரியிலிருந்து மத்திய அமைச்சராக பொன்னார் இருந்தார் அவரால் கூட இந்த நிறுத்தத்தை வாங்க முடியாமல் போனது.
பரசுராம் ரயில்:
மங்களுர் - நாகர்கோவில் பரசுராம் ரயிலுக்கு நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் ஒரு மார்க்கம் மங்களுர் - நாகர்கோவில் மார்க்கத்தில் மட்டும் நிறுத்தம் வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புனலூர் - கன்னியாகுமரி ரயில்
புனலூரிலிருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலை நாகர்கோவில்டவுன், ஆளுர், பள்ளியாடி, குழித்துறைமேற்கு ஆகியரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்; என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ரயில் கேரளாவுக்கு சென்றஉடன் அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்கின்றது குறிப்பிடதக்கது.
கன்னியாகுமரி ரயில்வேதுறை வளர்ச்சியில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும், புதிய நிறுத்தங்கள் வேண்டும் என்றால் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக அழுத்தம் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கிடைக்கும். இல்லாமல் ரயில்வே அமைச்சரை பார்த்து மனு கொடுப்பது தெற்கு ரயில்வே பொது மேலாளரை பார்த்து மனு கொடுப்பது பாராளுமன்றத்தில் விவாதங்களில் பேசுவது போன்ற எல்லாம் "மயிலே மயிலே இறகு போடு" என்ற பழமொழிக்கு வேலைக்கு உதவாது. இதை குமரி குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து தமது நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இனி காலம் கடந்து விட்டது.
புதிய ரயில்களை கேட்டு அழுத்தம் கொடுத்தால் எளிதாக வாங்கிவிட முடியும். ஆனால் ரயில் நிறுத்தங்களை அவ்வளவு எளிதாக ரயில்வே வாரியம் கொடுத்து விடாது. ரயில்வே வாரியத்தில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து எனது தொகுதிக்கு இது தேவை என்று கூறி இது நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன் என்று அந்த அலுவலகத்தின் முன்னால் போராட்டம் செய்தால் மட்டுமே இந்த இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிறுத்தம் கோரிக்கை ரயில்வே பரிசீலிக்கும்.
இவ்வாறு தான் கேரளாவை சார்ந்த எதிர்கட்சி எம்.பிகள் சாதித்து காட்டுகிறார்கள். இதனால் தேர்தலில் மக்கள் மீண்டும் மீண்டும் இது போன்றவர்களை தேர்வு செய்கின்றார்கள். என்று பயணிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சனி 16, ஆகஸ்ட் 2025 12:22:24 PM (IST)

பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
சனி 16, ஆகஸ்ட் 2025 11:53:39 AM (IST)

புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 9:02:29 AM (IST)

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:06:59 AM (IST)

GaneshAug 15, 2025 - 06:51:00 PM | Posted IP 162.1*****