» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சத்தில் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அடிக்கல் நாட்டு விழா!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:39:27 PM (IST)



நாகர்கோவிலில் ரூ.50 இலட்சம் மதிப்பில் குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு சர்.சி.பி இராமசாமி பூங்கா வளாகத்தில் குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (19.09.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலவிளை என்னும் கிராமத்தில் இராகவன் நாடார் – அம்மாள் தம்பதியரின் மகனாக 1923 அன்று பிறந்தார்கள் குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் . இவர் கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்டவர். சிறந்த வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், தன்னலமில்லா மக்கள் தொண்டர் விடுதலைப்போராட்ட தியாகி ஆவார். குமரி தந்தை மார்சல் நேசமணியிடம் இளம் வழக்கறிஞராக பணியாற்றி வழக்கறிஞர் தொழிலிலும் அரசியலிலும் குருவாக ஏற்று கொண்டார்கள்.

மேலும் 1945 முதல் 1948 வரை மிடலாம் பஞ்சாயத்து தலைவராகவும், திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1952 முதல் 1954 வரையும் 1962 முதல் 1967 வரையும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் திறம்பட செயல்பட்டார்கள்.1967-1971 விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் பணியாற்றினார். 1971-1976 வரை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டபேரவை எதிர்கட்சித்தலைவராகவும் இருந்துள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது A.V.M. கால்வாய் புனரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், பள்ளிக்கூடங்கள் உருவாக்குதல் போன்ற வளர்ச்சித் திட்டங்களை கிள்ளியூர் தொகுதிக்கு பெற்று தந்தார்கள். மேலும் அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் கு.காமராஜ் அவர்களிடம் கோரிக்கை வைத்து சிற்றாறு பட்டணங்கால் திட்டம் நிறைவேற்றி கிள்ளியூர் தொகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதி பூர்த்தி செய்து கொடுத்தார்கள். 

தொடர்ந்து பல்வேறு சாலை அபிவிருத்தி, பள்ளிகள், மருத்துவ வசதிகள், மின்சார வசதி பெற்றுக் கொடுத்தார். ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை நிறுவி அதன் பெருந்தலைவராக பணிபுரிந்து வேலை வாய்ப்புகள் உருவாக்கி பெற்றுக் கொடுத்தார்கள். மேலும் 1967 முதல் 1976 வரை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது விளாத்துறை நீரேற்றுத் திட்டம், நெய்யாறு இடது கரை சானல் அபிவிருத்தி திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்து விவசாய அபிவிருத்தி மற்றும் குடிநீர் தேவைகள் நிறைவேற்றி கொடுத்தார்கள். குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணையப் பேராடி இறந்த தியாகிகள் குடும்பத்திற்கு உதவி பணம் கண்டிப்பாக வழங்க வேண்டுமென்று பொன்னப்ப நாடார் பலமுறை வற்புறுத்தியதன் அடிப்படையில் 1974ம் ஆண்டு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் புதுக்கடைக்கு வந்து தியாகிகளின் குடும்பத்திற்கு உதவி பணம் வழங்கினார்கள். 

தமிழ்நாடு மக்களை பெரிதும் பாதித்தது காலமெல்லாம் மனித சமூகத்திற்காக பாடுபட்ட நல்லவரை காலம் கவர்ந்து சென்றது. வரலாற்றில் வாழ்வதற்காக தன் வாழ்வையே தியாகம் செய்தார் பொன்னப்பர் அன்னாரை கௌரவிக்கும் வகையில் அவரை நினைவு கூறும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் குமரி கோமேதகம் என அன்போடு அழைக்கப்பட்டார். 12.10.1976 அன்று பம்பாயில் விமான விபத்தில் மரணமடைந்தார்கள். 

குமரி மாவட்டம் மக்களால் குமரி கோமேதகம் என்று அழைக்கப்படுபவர் மற்றும் எங்களுக்கெல்லாம் அரசியல் ஆசனாக இருந்த பொன்னப்ப நாடார் நமது மாவட்டத்தின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று ஒரு கோமேதகம் திகழ்ந்தவர். அவருடைய நினைவாக நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் திடலுக்கு அருகில் அவருக்கு ஒரு திருவுருவச்சிலை வைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். 

அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் செய்தி மக்கள் தொடர்பு துறை மானிய கோரிக்கை 2025-2026-இல் குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் பணிகளை சிறப்பிக்கும் வகையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள். தற்போது நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள சர்.சி.பி இராமசாமி பூங்காவில் குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொன்னப்ப நாடார் குடும்பத்தின் சார்பாகவும் மாவட்டத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ஜோசப் ரென்ஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண்ஜெகத் பிரைட், குமரி கோமதேகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் மகன் பொன் கிருஷ்ணகுமார், மருமகள் நிர்மலா, மகள் விஜய லெட்சுமியின் கணவர் முனைவர்.மோகன், பேத்தி பத்மா ரோஷினி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, இந்துசமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி இராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின் சிலதா உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory